தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி
நெல்லை அருகே தனியார் பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 47). கட்டிட தொழிலாளியான இவர் நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில் தங்கி இருந்து கட்டுமான வேலை செய்து வந்தார். நேற்று மாலை தருவை பஸ் நிறுத்தம் பகுதியில் சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாபநாசத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக பலியானார். இதை கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்து பஸ் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் டிரைவர் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (42), கண்டக்டர் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த குமார் (45) ஆகியோரும் தாக்குதலில் காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.