ஓவேலியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி:உடலை எடுக்க விடாமல் 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்
ஓவேலியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானார். இதனால் காட்டு யானையை பிடிக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 2-வது நாளாக உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்
ஓவேலியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானார். இதனால் காட்டு யானையை பிடிக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 2-வது நாளாக உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளி பலி
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் குட்டி. இவரது மகன் நவுஷாத் (வயது 38). இவர் தனியார் எஸ்டேட்டில் பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் கேட்டுக்கு சொந்தமான காபி காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஜமால் (வயது 28) என்பவரும் சென்றார்.
அப்போது அதே பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென ஓடி வந்து துரத்தியது. இதை சற்றும் எதிர்பாராத நவுஷாத், ஜமால் ஆகியோர் தப்பி ஓடினர். இருப்பினும் காட்டு யானையிடம் நவுஷாத் சிக்கினார். தொடர்ந்து அவரை காட்டு யானை நசுக்கி கொன்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயங்களுடன் ஜமால் உயிர் தப்பினார். தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இதனிடையே போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த நவுஷாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக வந்தனர். ஆனால் உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ முகமது குதரதுல்லா, தாசில்தார் சித்தராஜ் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயிரிழந்த நவுஷாத் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் கிராம மக்கள் உயிரிழந்த நவ்ஷாத் உடலை எடுத்துக்கொண்டு சீபுரம் 4-ம் நெம்பர் பகுதிக்கு வந்தனர். அங்கு ஒரு அறையில் உடலை வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் கிராம மக்கள் சமாதானம் அடையவில்லை. தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது.
2-வது நாளாக...
நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனிடையே முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் சீபுரத்துக்கு வனத்துறைக்கு சொந்தமான லாரியில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானையை விரட்டும் பணி நடைபெற்றது. பின்னர் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உயிரிழந்த நவுஷாத் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்துமாலை 4 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து நவுஷாத் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.