மாமனாரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
ஆம்பூர் அருகே அம்மிக்கல்லை போட்டு மாமனாரை கொலை செய்த தொழிலாளிக்கு திருப்பத்தூர் கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
ஆம்பூர் அருகே அம்மிக்கல்லை போட்டு மாமனாரை கொலை செய்த தொழிலாளிக்கு திருப்பத்தூர் கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
குடும்ப தகராறு
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பாங்கிஷாப் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 44). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பார்த்திபனின் அண்ணன் தீனதயாளின் மகள் வரலட்சுமியை திருத்தணியை சேர்ந்த தொழிலாளி காளிதாஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
காளிதாஸ் - வரலட்சுமிக்கு இடையே குடும்பதகராறு இருந்து வந்துள்ளது. அப்போது பார்த்திபன் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைப்பது வழக்கம்.
அம்மிக்கல்லை போட்டு கொலை
இந்தநிலையில் கடந்த 4.10.2018 அன்று வரலட்சுமி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக திருத்தணியில் இருந்து தனது சித்தப்பா வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. காளிதாஸ் தனது மனைவியை தேடி சின்னமாமனாரான பார்த்திபன் வீட்டிற்கு வந்து தனது மனைவியை எங்கே என்று கேட்டு உள்ளார். அப்போது பார்த்திபனுக்கும், காளிதாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
காளிதாஸ் தனது சின்னமாமனார் பார்த்திபனை அடித்து உதைத்து கீழே தள்ளி, அருகில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். உடனே காளிதாஸ் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதி மீனாகுமாரி வழக்கை விசாரித்து, காளிதாசுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் பி.டி.சரவணன் வாதடினார்.