கூலித் தொழிலாளி குத்திக் கொலை


தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:16:24+05:30)

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூலித் தொழிலாளி

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சாந்திநகரை சேந்தவர் கார்த்திக் (வயது 36). கூலித் தொழிலாளியான இவர், தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே வழக்கமாக படுத்து இருப்பாராம். அதே பகுதியில் செல்சினி காலனியை சேர்ந்த மாரிக்கண்ணன் (24) என்பவரும் படுத்து தூங்குவாராம். இந்த பகுதியில் தினமும் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் 3 நேரமும் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து உள்ளனர். நேற்று முன்தினம் மாரிக்கண்ணன் வெளியில் சென்று இருந்த போது அங்கு வந்த தொண்டு நிறுவனத்தினர் சாப்பாடு கொடுத்து விட்டு சென்று விட்டார்களாம். இதனால் மாரிக்கண்ணன், தனது சாப்பாட்டை யார் வாங்கியது என்று கேட்டு தகராறு செய்து உள்ளார்.

கொலை

அப்போது, கார்த்திக்கிடம் சென்றும் தகராறு செய்தாராம். அப்போது கார்த்திக் மாரிக்கண்ணனை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிக்கண்ணன் அந்த பகுதியில் கிடந்த சிறிய கம்பியை எடுத்து கார்த்திக்கை குத்தி விட்டு தப்பி சென்று விட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிக்கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story