அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் பொதுமக்கள்


அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் பொதுமக்கள்
x

அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் பொதுமக்கள்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 38-வது வார்டு சுபாஷ் பள்ளி சாலை அருகே கண்ணன் காட்டேஜ்நகரில் உள்ள 2 வீதிகள் உள்ளன. அங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 2 வீதிகளிலும் சாக்கடை கழிவுநீர் வீதிகளில் பாய்வதுடன், குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படும் அபாயநிலை அந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- சாக்கடை கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தருமாறு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஸ்மார்ட் சிட்டி பணிகளை காரணம் காட்டி, இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் எங்கள் பகுதிக்கு செய்து கொடுக்கப்படவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம் என்று உறுதி அளித்ததால், அதை நம்பி வாக்களித்தோம். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எம்.ஏ.,, இந்த பகுதியை வந்து பார்வையிடவும் இல்லை. மக்களின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவும் இல்லை. இந்த பகுதி மக்களுக்கு முக்கிய தேவையாக சாக்கடை கால்வாய் மற்றும் சாலை வசதி உள்ளது.

இது இல்லாததால் குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் நிலவுகிறது. கழிவுநீர் வீதியில் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story