பாப்பாரப்பட்டியில்கோலம் போடும் பெண்களிடம் சில்மிஷம்பொதுமக்கள் போலீசில் புகார்
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி கேடி முதலி தெருவில் நேற்று அதிகாலை பெண் ஒருவர் தனது வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்த படி ஒருவர் வந்தார். அவர் திடீரென அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இந்தநிலையில் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவனிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பாப்பாரப்பட்டி பாரதிதாசன் தெரு, மந்தை மாரியம்மன் தெரு, கேடி முதலி தெரு, பழைய கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த சில மாதங்களாக அதிகாலை நேரத்தில் வீடுகளின் முன்பு கோலம் போடும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வரும் மர்ம நபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்று கொண்ட போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.