திருமண சேவை மையம் பெயரில் என்ஜினீயரிடம் ரூ.23 ஆயிரம் சுருட்டிய பெண்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
தர்மபுரி:
தர்மபுரி தடங்கம் சத்யா நகரை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகன் ஹரி பிரசாத் (வயது 32). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். ஹரி பிரசாத் திருமண சேவை மையம் ஒன்றில் திருமணத்துக்கு பெண் கேட்டு பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் அந்த சேவை மையத்தில் இருந்து பார்வதி என்ற ஒரு பெண் ஹரி பிரசாத்தை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய அந்த பெண் தனது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ரூ.23 ஆயிரம் பணம் வேண்டும் என்றும், விரைவில் பணத்தை திருப்பி தருகிறேன் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி ஹரி பிரசாத் அந்த பெண்ணின் கூகுள் பே எண்ணிற்கு பணத்தை அனுப்பி உள்ளார். சில நாட்கள் கழித்து ஹரி பிரசாத் அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் ஹரி பிரசாத் தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கிருஷ்ணகிரியிலும் அந்த பெண் வேறு ஒருவரிடம் பணம் மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.