கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் காணாமல் போன ஏரிகள்-மழை நீரை சேமிக்க முடியாமல் பாதிப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் காணாமல் போகி உள்ளன. இதனால் இந்த ஏரிகளில் முழுமையாக மழை நீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
800-க்கும் மேற்பட்ட ஏரிகள்
தர்மபுரி மாவட்டம் மானாவாரி பயிர் சாகுபடியை அடிப்படையாக கொண்ட விவசாய நிலங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். மழை நீரை முக்கிய ஆதாரமாக கொண்டு இந்த மாவட்டத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்குவது வழக்கம்.
இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் சாகுபடி வசதி பெறுகின்றன.
குடிமராமத்து பணி
இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளில் மழைநீர் தேங்கும் பரப்பில் கருவேல மரங்கள் அதிக அளவில் அடர்ந்து வளர்ந்தன. இதனால் ஏரிகள் காணாமல் போகி உள்ளன. இதன் காரணமாக இந்த ஏரிகளில் மழைநீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பங்களிப்பு நிதியுடன் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஏரிகளில் அடர்ந்து வளர்ந்து இருந்த கருவேல மரங்களை முழுமையாக அகற்றி ஏரிகளை தூர்வாரும் பணி நடைபெற்றது.
மீண்டும் வளர்ந்த கருவேல மரங்கள்
இந்த சீரமைப்பு பணி நடைபெற்ற ஏரிகளில் பலவற்றில் முறையான பராமரிப்பு இல்லாததால் மீண்டும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர தொடங்கின. கடந்த 2 ஆண்டுகளில் சோகத்தூர் ஏரி, கம்பைநல்லூர் தலாவ் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் மழைநீர் தேங்கும் பெரும் பகுதியை கருவேல மரங்கள் மீண்டும் ஆக்கிரமித்து விட்டன.
இந்த ஏரிகளில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஏரிக்கு மழைநீர் வரும் வரத்து கால்வாய்களை கண்டறிந்து அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரிக்கு மழைநீர் வரும் நீர் வழித்தடங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட மக்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-
மழைநீர் தேங்கவில்லை
புலிக்கல் கொள்ளுபட்டியை சேர்ந்த விவசாயி பாலாஜி:-
காரிமங்கலம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 5 ஏரிகளும், ஊராட்சிகள் கட்டுப்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன. இவற்றில் சில ஏரிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து பணி நடைபெற்றது. இருந்த போதிலும் தொடர் கண்காணிப்பு, முறையான பராமரிப்பு இல்லாததால் பல ஏரிகளில் கருவேல மரங்கள் மீண்டும் அடர்ந்து வளர்ந்து விட்டன.