'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் ஏரி தூர்வாரும் பணி அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
ஜோலார்பேட்டை அருகே ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் மூலமாக ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
ஜோலார்பேட்டை அருகே 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் மூலமாக ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
'நம்ம ஊரு சூப்பரு'
தமிழகம் முழுவதும் அனைத்து கிராமம் மற்றும் நகர, மாநகர பகுதிகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவது, நீர் நிலைகளில் உள்ள குப்பைகளை அகற்றி தூர் வாருவது, அரசு அலுவலக கட்டிடங்கள், பள்ளிகளை தூய்மையாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசால் நம்ம ஊரு சூப்பரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி அண்ணாண்டப்பட்டி அருகே உள்ள அன்னை நகர் ஏரியில் உள்ள குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு தூர்வாரும் பணியை கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தாசில்தார் சிவப்பிரகாசம், ஜோலார்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.