ரூ.21½ லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட ரூ.21½ லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 66). இவருடைய மனைவி பொற்செல்வி (58). இவர்களுக்கு சொந்தமான 12 செண்ட் இடம் முன்னீர்பள்ளத்தில் உள்ளது. அதனை போலி ஆவணம் மூலம் மர்மநபர்கள் விற்பனை செய்துள்ளனர். அதேபோல் பாளையங்கோட்டை அருணகிரிநாதர் தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான 3 செண்ட் இடம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மணக்கரை பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்பவருக்கு கீழநத்தம் பகுதியில் உள்ள 4½ செண்ட் இடம், மேலசெவல் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த வேலம்மாளுக்கு சொந்தமான 11 செண்ட் இடம் ஆகியவற்றையும் மர்மநபர்கள் சிலர் போலி ஆவணங்கள் மூலம் விற்று உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க அவர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ் மேற்பார்வையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி ரூ.21½ லட்சம் மதிப்பிலான 30½ செண்ட் நிலத்தை மீட்டனர். அந்த இடங்களுக்கான ஆவணங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று வழங்கினார்.