நிலத்தரகர் அடித்துக்கொலை


நிலத்தரகர் அடித்துக்கொலை
x

குடியாத்தம் அருகே நிலத்தரகர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் அருகே நிலத்தரகர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

நிலத்தரகர் அடித்துக்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 45). வீட்டு மனைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி பாரதி. சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ரித்திஷ் குமார் (16), கிஷோர்குமார் (13) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ரித்திஷ்குமார் பிளஸ்-1 படித்துள்ளார். கிஷோர் குமார் எட்டாம் வகுப்பு படித்துள்ளார்.

பழனி நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் தனது இரு சக்கர வாகனத்தில் குடியாத்தத்தில் இருந்து ஊருக்கு சென்றுள்ளார். நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள முல்லை நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவருடைய தலையின் பின்புறத்தில் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனி கொடுக்கல்-வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது நிலம் வாங்கி விற்றதில் பிரச்சினையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயார் இறந்ததால் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்த இரண்டு மகன்களும் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

போக்குவரத்து நெரிசல்

குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை அருகே கொலை நடைபெற்றதால் போலீசார் விசாரணை நடத்தியபோது வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாகனங்கள் குடியாத்தம் காமராஜர் பாலம் வரை நின்றது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு 10 மணிக்கு பிறகு போக்குவரத்து சீரானது.


Related Tags :
Next Story