குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே தண்டவாளத்தில் மண்சரிவு
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்டவாளத்தில் மண்சரிவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இது தவிர ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதை நெடுஞ்சாலைத்துறையினர் அவ்வப்போது அகற்றி வருகின்றனர்.
இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் ஹில்குரோவ்-ரன்னிமேடு ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது.
15 நிமிடங்கள் தாமதம்
இதை நேற்று காலையில் ரோந்து சென்ற ரெயில்வே ஊழியர் பார்த்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூரை நோக்கி மலைரெயில் வந்து கொண்டு இருந்தது. உடனே என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஹில்குரோவ் ரெயில் நிலையத்தில் மலைரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணி முடிவடைந்ததும், குன்னூரை நோக்கி மலைரெயில் இயக்கப்பட்டது. வழக்கமாக காலை 10.30 மணிக்கு குன்னூரை அடைய வேண்டிய மலைரெயில் போக்குவரத்து பாதிப்பு காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக 10.45 மணிக்கு வந்தடைந்தது. அதன்பின்னர் 10.55 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.