மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்
ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:- இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பலர் தங்களது இன்னுயிரை நீத்தனர். அவர்களை நினைவு கொள்ளும் வகையிலேயே மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எனது தந்தையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான க.சொ.கணேசன் தலைமையில் மிகப்பெரிய இந்தி எதிர்ப்பு போராட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற போது அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் இப்பகுதியில் உள்ள ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். எனவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தியாகியின் மகன் என்பதில் எனக்கு பெருமை உண்டு. இந்தநிலையில் தற்போது இந்தி திணிப்பு என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு பணிக்கான எழுத்து தேர்வில் இந்தியை திணித்து வருகிறார்கள். அதனை எதிர்த்து நாம் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ள நிலையில் அது தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு வடிவங்களில் இந்தி திணிப்பை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, மொழிப்போர் தியாகிகளான ஹனிபா, சாமிநாதன், ராமலிங்கம் ஆகியோரை கவுரவித்து தலைமை கழக பேச்சாளர்கள் ஜோன்ஸ் ரூசோ, நெடுஞ்செழியன், கழக சட்ட திட்ட திருத்த குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர்கள் ரெங்க.முருகன் கலியபெருமாள், ஜெயங்கொண்டம் நகர மன்ற துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி, உடையார்பாளையம் பேரூர் செயலாளர் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் அணி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராமராஜன் வரவேற்றார். முடிவில் ஜெயங்கொண்டம் நகர மாணவர் அணி அமைப்பாளர் ஆனந்த் நன்றி கூறினார்.