பெருந்துறையில், தனியார் வங்கிநகை மதிப்பீட்டாளர் வீட்டின்கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
பெருந்துறையில் தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பெருந்துறை
பெருந்துறையில் தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை மதிப்பீட்டாளர்
பெருந்துறை ஜீவா நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 27). இவர் பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில், நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 17-ந் தேதி அன்பழகன், அவருடைய தாய் கவிதா, பாட்டி தனலட்சுமி ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.
பின்னர் மறுநாளான நேற்று முன்தினம் காலை அவர்கள் அனைவரும் தங்களுடைய வீட்டுக்கு வந்து உள்ளனர். அப்போது வீட்டின் கேட் திறந்து கிடந்தது. இதனால் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவு நெம்பப்பட்டு அது உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
8 பவுன் நகை திருட்டு
இதனால் அவர்கள் பதற்றத்துடன், வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் எடையிலான தங்க சங்கிலி, கம்மல், ஜிமிக்கி உள்ளிட்ட நகைகள் திருட்டு போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.