லாரி மோதி விவசாயி பலி
சீர்காழி அருகே லாரி மோதி விவசாயி பலியானார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே லாரி மோதி விவசாயி பலியானார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயி பலி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி எருக்கூர் முதல் காரைமேடு வரை புறவழிச்சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை சீர்காழி அருகே பாதரக்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி நடேசன் (வயது 61) என்பவர் வீட்டில் இருந்து புறவழிச்சாலை வழியாக வயல் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி, சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பது தெரியாமல் அதில் ஏறி இறங்கியதுடன் நடந்து சென்ற நடேசன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த நடேசனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நடேசன் இறந்தார்.
சாலை மறியல்
இதுகுறித்து தகவலறிந்த பாதரக்குடி கிராம மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் தலைமையில் புறவழிச்சாலையில் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்ட வாகனங்களை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது புறவழிச்சாலையில் பள்ளம் தோண்டினால் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் பிரதிபலிப்பான், தடுப்புகள் அமைக்க வேண்டும்.
உயிரிழந்த நடேசன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.