துணி மூட்டைகள், இஸ்திரி பெட்டியுடன் திரண்டு வந்த சலவை தொழிலாளர்கள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு துணி மூட்டைகள், இஸ்திரி பெட்டியுடன் திரண்டு வந்த சலவை தொழிலாளர்கள் அரசு வழங்கிய நிலத்தை மீட்டு தரும்படி மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராணி, கலால் உதவி ஆணையர் ஜெயசந்திரகலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 193 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் கடன், முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா, மானியக்கடன் என மொத்தம் ரூ.25 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சலவை தொழிலாளர்கள்
அப்போது துணி மூட்டைகள், வாளி, இஸ்திரி பெட்டி ஆகியவற்றை சுமந்தபடி சலவை தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அரசு தங்களுக்கு வழங்கிய நிலத்தை மீட்டுதரும்படி அவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடியனூத்து ஊராட்சியில் சலவை தொழிலாளர்கள் 50 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டு தரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பழனி கோதைமங்கலம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், கடந்த 1992-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 153 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அரசு சார்பில் இலவசமாக வீடு கட்டி தரும்படி கோரிக்கை விடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பிறரிடம் கடன் வாங்கி வீடு கட்டுவதற்கு முடிவு செய்தோம். இதற்கிடையே எங்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்துவிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்க போவதாக தெரிகிறது. அதனால் நாங்கள் அனைவரும் பாதிக்கப்படுவோம். எனவே எங்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யாமல் எங்களுக்கே வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கால்வாய் ஆக்கிரமிப்பு
மேலும் அகரம் பேரூராட்சி காமாட்சிபுரத்தை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் 2 ஆயிரம் பேர் வசிக்கிறோம். விவசாயமே பிரதான தொழில் ஆகும். இந்த நிலையில் ராமையா கவுண்டன்குளத்தில் இருந்து குடகனாற்றுக்கு தண்ணீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், என்று கூறியிருக்கின்றனர்.