புல்வெளி அமைக்கும் பணிகள் தீவிரம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புல்வெளி உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புல்வெளி உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முட்புதர்கள்
திருச்சி புதிய கலெக்டர் அலுவலகத்தின் முன்புறம் காலியாக இருந்த இடத்தில், முட்புதர்கள் மண்டி கிடந்தது. கடந்த 2011-ம் ஆண்டு கலெக்டராக பொறுப்பேற்ற ஜெயஸ்ரீ முரளிதரன், இவ்வளவு இடத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்று எண்ணி அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி 100-க்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது அந்த மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து அழகிய சோலைவனம் போல காட்சியளிக்கிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அந்த மரங்களின் அடியில் இளைப்பாறி செல்கின்றனர். ஆனால், காய்ந்த இலைகளாலும், களைச்செடிகளாலும் சூழப்பட்டு ஏதோ காட்டுக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி வந்தது.
புல்வெளி அமைக்கும் பணி
இந்நிலையில், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அவற்றை சுத்தம் செய்து பராமரிக்க உத்தரவிட்டார். அதன்படி பொதுப்பணித்துறை (கட்டிடம் பராமரிப்பு) சார்பில் மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்த செடி, கொடிகள், காய்ந்த இலைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும், அந்த இடம் முழுவதும் அழகிய புல்வெளி அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் முடிந்தபின் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதி அழகிய புல்வெளி சோலையாக காட்சியளிக்கும்.