ஸ்கூட்டர் மீது லாரி மோதி வக்கீல்-மாமியார் பலி


ஸ்கூட்டர் மீது லாரி மோதி வக்கீல்-மாமியார் பலி
x

வெள்ளியணையில் ஸ்கூட்டர் மீது லாரி மோதி வக்கீல் மற்றும் அவரது மாமியார் பரிதாபமாக இறந்தனர்.

கரூர்

ஸ்கூட்டர் மீது லாரி மோதல்

கரூர் மாவட்டம், தோகைமலையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று முன்தினம் இரவு வெள்ளியணை வழியாக ஓசூருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பழைய சுக்காம்பட்டியை சேர்ந்த கர்ணன் (வயது 50) என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த லாரி வெள்ளியணை ஒத்தையூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் சென்ற அடையாளம் தெரியாத ஒரு ஆண் மற்றும் பெண் லாரியின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முகம் சிதைந்த நிலையில் இருந்ததால் அவர்கள் யார் என்று உடனடியாக தெரியவில்லை.ய

வக்கீல்-மாமியார் பலி

இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்தில் இறந்தது கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா இடையபட்டி பகுதி புங்கம்பாடியை சேர்ந்த வக்கீல் கனகராஜ் (34) மற்றும் அவரது மாமியார் திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா புதுவாடிபுதூரை சேர்ந்த முருகவேல் மனைவி சுசீலா (50) என்பதும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் லாரி டிரைவர் கர்ணன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story