கர்நாடக போலீசாருடன் வக்கீல்கள் வாக்குவாதம்


கர்நாடக போலீசாருடன் வக்கீல்கள் வாக்குவாதம்
x

பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கர்நாடக போலீசாருடன் வக்கீல்கள் வாக்குவாதம்

தூத்துக்குடி

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தொழில் விஷயமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.25 லட்சம் வாங்கி இருந்தாராம். இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்தி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி பெண்ணிடமும் கர்நாடக போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளனர். அவரிடம் இருந்த 2 கார்களையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராமமூர்த்தி நகர் போலீசார் நேற்று காலையில் தூத்துக்குடிக்கு வந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் அங்கு வந்தனர். அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக கர்நாடக போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.. அந்த பெண்ணை கோர்ட்டில் வந்து ஆஜராகுமாறு தெரிவித்து விட்டு, கர்நாடக போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story