இரணியலில் வக்கீல்கள் சாலை மறியல்
இரணியலில் மழைநீர் ஓடையில் கழிவு நீர் தேங்குவதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திங்கள்சந்தை:
இரணியலில் மழைநீர் ஓடையில் கழிவு நீர் தேங்குவதை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
இரணியல் கோர்ட்டு அருகே ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் ஓடையில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இந்த கழிவு நீரை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.
இந்த நிலையில் மழைநீர் ஓடையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி இரணியல் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று காலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திங்கள்சந்தை-இரணியல் சாலையில் அமர்ந்து கழிவு நீரை அகற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில் ஆண்கள், ெபண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி, இரணியல் செயல் அலுவலர் லட்சுமி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் திங்கள்சந்தை - இரணியல் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.