கருவேப்பிலங்குறிச்சி போலீசாரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கருவேப்பிலங்குறிச்சி போலீசாரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் விருத்தாசலம் நீதிமன்றத்தில் பணிபுரியும் வக்கீல் கதிரவன் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய பயிர்களை அழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்டும், ஒருதலைபட்சமாக எதிர்தரப்பை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் கருவேப்பிலங்குறிச்சி போலீசாரை கண்டித்து நவம்பர் 29-ந்தேதி நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் நடத்துவது, 30-ந்தேதி கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விருத்தாசலம் வக்கீல்கள் நேற்று காலை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் அம்பேத்கர் தலைமை தாங்கினார். அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சதீஷ்குமார், பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை, வழக்கறிஞர் சங்கங்களின் செயலாளர்கள் மாய.மணிகண்டன், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் விஜயகுமார், அருள்குமார், சிவசங்கர், அசோக்குமார், அப்துல்லா, ராமானுஜம், புஷ்ப தேவன், காசி விஸ்வநாதன், ரவிச்சந்திரன், விஸ்வநாதன், ராஜேந்திரன், பன்னீர் செல்வம், மோகன், கணபதி, ரேவதி, பரமேஸ்வரி, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருவேப்பிலங்குறிச்சி போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.