வழக்கறிஞர்கள் வாத திறமையை ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்
சென்னை
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை பெருங்குடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக இணை வேந்தரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, துணைவேந்தர் சந்தோஷ்குமார், உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ், முன்னாள் நீதிபதி கிருபாகரன், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கல்வெட்டை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அவர் வெள்ளி விழா மலரையும் வெளியிட்டார். . இதையடுத்து, நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் சட்ட பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழகம் தான். அரசு சட்டக்கல்லூரி மூலம் கிராமப்புற மாணவர்கள் எளிதாக சட்டம் பயின்று வருகின்றனர். கிரீன்வேஸ் சாலையில் தாம் குடியேற இருந்த இல்லத்தை சட்டப் பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.
அனைவருக்கும் தரமான உயர்கல்வியை வழங்க, பல்வேறு சீரிய திட்டங்களுக்கு செயல் வடிவம் தந்து வருகிறோம். இலவச பயணச்சீட்டு சலுகை மாணவியருக்கு பெரும் உதவியாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உயர்கல்விக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டப் பல்கலைக்கழகம் மேலும் பல சட்ட மாமேதைகளை உருவாக்க வேண்டும்.
சீர்மிகு சட்டப்பள்ளியில் பயில்வோரில் 70 சதவீதம் பேர் மாணவிகள். 40 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில் தற்போது 4,500க்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர்.
சட்ட விதி மட்டுமின்றி அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும், சமூக நீதியையும் காபாற்றும் வகையில் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும். ஏழை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் வழக்கறிஞர்களாக சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும். அவர்களின் நலனுக்காக தங்கள் வாதத் திறமையை வழக்கறிஞர்கள் பயன்படுத்த வேண்டும். சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.