செஞ்சி பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக 6 பள்ளி வாசல்களில் துண்டு பிரசுரம் வீச்சு கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது


செஞ்சி பகுதியில்  கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக 6 பள்ளி வாசல்களில் துண்டு பிரசுரம் வீச்சு  கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
x

செஞ்சி பகுதியில் உள்ள 6 பள்ளி வாசல்களில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வீசிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்


செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, அப்பம்பட்டு, சொரத்தூர், கவரை, என்.ஆர். பேட்டை, செஞ்சி பெரிய பள்ளிவாசல் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் மர்மநபர்கள் துண்டு பிரசுரங்களை வீசினர்.

அதில், நபிகள் நாயகம் மற்றும் அல்லா குறித்தும், முஸ்லிம்கள் பற்றியும் தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தது. கலவரத்தை தூண்டும் விதமான வாசகங்களுடன் அச்சடிக்கப்பட்டிருந்த அந்த துண்டுபிரசுரங்களை பார்த்த முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

5 தனிப்படைகள் அமைப்பு

இதையடுத்து ஜமாத் தலைவர் சையத் மஜீத் பாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா செஞ்சி போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் அவரது மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

2 பேர் கைது

அப்போது, ஒரு பள்ளிவாசல் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் பார்த்தனர். அதில் துண்டு பிரசுரங்களை வீசியது, விக்கிரவாண்டியை சேர்ந்த இளவரசன் (வயது 35), சஞ்சய் (21) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சஞ்சய் விழுப்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. 3-வது வருடம் படித்து வருகிறார். மேலும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் நேரடி மேற்பார்வையில் செஞ்சி பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவவம் செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story