பேரூராட்சி முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்த வேண்டும்


பள்ளிகொண்டா பேரூராட்சி முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்த வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வேலூர்

பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வாசிம் அக்ரம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் உமாராணி வரவேற்று பேசினார். சந்தோஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட 18 வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து நிதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதில் அளித்த தலைவர் சுபபிரியா குமரன் ரூ.33 லட்சத்தில் 11-வது வார்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், 17-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கும், 18-வது வார்டில் மழை நீர் கால்வாய் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் வேப்பங்கால் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பத்மாவதி நகரில் ஒரு லட்சம் லிட்டர கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, கிழாச்சூர் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடத்த கூட்டத்தில் 18 வார்டுகளிலும் முக்கிய இடங்களில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று வரை விளக்குகள் வழங்கப்படவில்லை. உடனடியாகஎல்.இ.டி. விளக்குகள் பொருத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த தலைவர் உடனடியாக எல்.இ.டி. பல்புகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

பேரூராட்சி முழுவதும் நூற்றுக்கணக்கான பன்றிகள் திரிவதாகவும், தெரு நாய்கள் அந்த வழியாக செல்வோரை கடித்து குதறி வருவதாகவும், உடனடியாக நாய்களையும், பன்றிகளையும் அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதற்கு பதிலளித்த தலைவர் பன்றிகளையும், நாய்களையும் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினர். முடிவில் பதிவரை எழுத்தர் நன்றி கூறினார்.


Next Story