சட்டசபையில் கவர்னரிடம் நடந்து கொண்ட செயல் சரியல்ல எச்.ராஜா பேட்டி
சட்டசபையில் கவர்னரிடம் நடந்து கொண்ட செயல் சரியல்ல என எச்.ராஜா பேட்டியளித்தார்
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 18 சித்தர்கள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கோவிலுக்கு வந்த பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த 18 சித்தர் கோவில் கீழடியில் அமைந்தது மிகவும் விேஷசமானது. ஏனென்றால் கீழடியில் தமிழர்கள் வரலாறு பற்றி தற்போது பேசப்படுகிறது. அகழாய்வு என்பது அழிந்து போன பண்பாட்டு தேவையாகும். இங்கு ஆழம் அதிகமாக தோண்ட வேண்டும். தற்சமயம் 100 அடிக்குள் தான் நடைபெறுகிறது. இதனால் பல விபரங்கள் தெரியவராது. தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வு அவமானகரமானது. கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் அவைக்குறிப்பில் உள்ள பல வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளதாகவும், அதற்கு அரசு தரப்பில் பிரிண்டுக்கு சென்று விட்டதால் நீங்கள் படிக்கும் போது தவிர்த்து படியுங்கள் என அரசு தரப்பில் சொல்லப்பட்டது என கூறுகின்றனர். இதை கவர்னர் படித்தபோது தான் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.இந்த செயல் சரியல்ல. தமிழ்நாடு முழுவதும் பசு மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவி வருகிறது. அதற்கு போட தடுப்பூசி இல்லை என்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.