ஈரோட்டில் சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு ஆய்வு: அரசின் வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டனர்
சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு ஆய்வு:
ஈரோட்டில் சட்டமன்ற பேரவை கணக்கு குழுவினர் அரசின் வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
பொது கணக்கு குழு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வுமான கு.செல்வபெருந்தகை தலைமையில் பொது கணக்குக்குழு உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களுமான டாக்டர் சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), எஸ்.சுதர்சனம் (மாதவரம்), கே.மாரிமுத்து (திருத்துறைபூண்டி), எம்.ராஜமுத்து (வீரபாண்டி) ஆகியோர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டனர்.
முன்னதாக ஈரோடு வந்த குழு தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் உறுப்பினர்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டும், புதிதாக மேற்கொள்ள இருக்கிற திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டும் தெரிந்து கொண்டனர்.
வியாபாரிகள் கோரிக்கை
ஈரோடு பெரியவலசு அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடத்துக்கு சென்ற குழுவினர் அங்கு ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர். ஈரோடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி ஜவுளி சந்தையில் ரூ.51 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை பார்வையிட்டனர். அப்போது ஜவுளி வியாபாரிகள் அவர்களிடம், கனி ஜவுளி சந்தையில் பல ஆண்டுகளாக கடைவைத்து நடத்தி வரும் உள்ளூர் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
திடீர் சோதனை
தொடர்ந்து அதிகாரிகள் எதிர்பாராத வகையில் பொது கணக்கு குழு எம்.எல்.ஏ.க்கள் ஈரோடு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரையுடன் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகள் கேட்டு விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
ஆய்வுக்கூட்டம்
தொடர்ந்து ஈரோடு மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி, நெடுஞ்சாலைகள் துறை, கால்நடை பராமரிப்பு துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, நுகர்வோர் பாதுகாப்பு துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மருத்துவத்துறை, சமூகநலத்துறை, வேளாண்மைத்துறை, வணிகவரித்துறை என அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
ராஜீவ்காந்தி
கூட்டத்தில் பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை பேசும்போது கூறியதாவது:-
நாட்டில் பற்றாக்குறையாக உள்ள வளங்கள் வீணடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி குறிப்பிட்டு அரசால் ஒதுக்கப்படும் நிதி மக்களை சரியாக சென்று அடைவது இல்லை. அதாவது ரூ.1 ஒதுக்கப்படுவதாக வைத்துக்கொண்டால் அதில் 16 காசுகள் மட்டுமே மக்களை சென்று அடைகிறது என்று சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி கூறி உள்ளார். இதுகுறித்து இப்போது ஆராய வேண்டும். குறிப்பிட்ட சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களையும் ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதியின் ஒவ்வொரு ரூபாயும் சிக்கனமாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
இந்த ஆய்வு கூட்டத்தில் அ.கணேசமூர்த்தி எம்.பி., பொது கணக்கு குழு உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களுமான டாக்டர் சி.சரஸ்வதி, எஸ்.சுதர்சனம், கே.மாரிமுத்து, எம்.ராஜமுத்து, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், திருமகன் ஈவெரா, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், தலைமை செயலக இணை செயலாளர் பி.தேன்மொழி, துணை செயலாளர் பா.ரேவதி, ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், செயற்பொறியாளர் விஜயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, மாநகர நல அதிகாரி டாக்டர் பிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராணி, உதவி கோட்ட பொறியாளர் சரவணன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.