திண்டுக்கல்லுக்கு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு வருகை
திண்டுக்கல்லுக்கு வந்த சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழுவினர், அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தும் விதம் குறித்து ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல்லுக்கு வந்த சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழுவினர், அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தும் விதம் குறித்து ஆய்வு செய்தனர்.
சட்டவிதிகள் ஆய்வுக்குழு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழுவினர் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தனர். இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை கூட்ட அரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் பூங்கொடி முன்னிலை வகித்தார்.
இதையடுத்து குழு தலைவர் சிவக்குமார் கூறுகையில், தமிழக சட்டமன்றத்தில் பொதுமக்கள் நலன்கருதி பல்வேறு சட்ட திருத்தங்கள், புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதேபோல் நலத்திட்டங்களை செயல்படுத்தவும், அரசு துறைகளை மேம்படுத்தவும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தம் 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? மக்களுக்கு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா? என்று மாவட்டந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது.
2 நாட்கள் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கொடைக்கானலில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. திண்டுக்கல்லில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கால்நடை மருத்துவ முகாம், தீவன பெருக்கம், கால்நடை பராமரிப்பு கடனுதவிகள், பால் உற்பத்தியை பெருக்கும் திட்டங்கள், மீன் வளர்ப்பு, மீனவர் தொழில் மேம்பாட்டு கடனுதவி, வேளாண் கடனுதவி, மானிய விலையில் விதைகள், பயிர்க்கடன், உழவர் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது, என்றார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரப்பன், எபினேசர், சிவகாமசுந்தரி, செல்வராஜ், பாலசுப்பிரமணியன், ராமச்சந்திரன், அரசு இணை செயலாளர் அன்புசோழன், துணை செயலாளர் கணேஷ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.