அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு
சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பொதுகணக்கு குழுவினர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில், உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்ட சி.டி.ஸ்கேன் மையத்தை பார்வையிட்டு தினமும் எத்தனை பேருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்படுகிறது என்ற விவரத்தை கேட்டறிந்தனர். தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் ஆய்வு செய்து நோயாளிகளிடம் ஆஸ்பத்திரியில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று கேட்டறிந்தனர்.
கூடுதல் டாக்டர்கள்
சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கூடுதலாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகையிடம், சீர்காழி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பானுமதி கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தணிக்கை குழு தலைவர் தெரிவித்தார்.
இ-சேவை மையம்
தொடர்ந்து காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட இ-சேவை மைய கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், டாக்டர்கள் அருண்ராஜ்குமார், மருதவாணன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
திருவெண்காடு
இதேபேல் திருவெண்காடு அருகே நாங்கூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது இந்த விடுதியில் கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என குழு தலைவர் தெரிவித்தார்.
தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி
இதை தொடர்ந்து மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை சட்டமன்ற பொது கணக்குகுழு தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு கரும்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் ரூ.1,000 கொடுத்தாலும், ஒரு கரும்பாவது அரசு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.