அலங்கியம் ஒழுங்குமுறை கூடத்தில் கொப்பரை கொள்முதல் நிலையம்
அலங்கியம் ஒழுங்குமுறை கூடத்தில் கொப்பரை கொள்முதல் நிலையம்
தாராபுரம்
அலங்கியம் ஒழுங்குமுறைகூடத்தில் கொப்பரை கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயற்குழு கூட்டமும் உழவர் தின கொடியேற்று விழா தாராபுரம் அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டதலைவர் அலங்கியம் ஈஸ்வரமுர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம், செயலாளர் ஈஸ்வரன், மகளிர் அணி தலைவர் டாக்டர் ராஜரீகா, ஈரோடு மாவட்ட தலைவர் மகுடீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில தலைவர் செல்லமுத்து கூறியதாவது:- தாராபுரம் தாலுகா பொன்னிவாடி கிராமத்தில் தாராபுரம் நல்லதங்காள் அணைக்கு விவசாயிகள் 750 ஏக்கர் நிலத்தை 2002-ம் ஆண்டு வழங்கினார்கள். அரசு வழங்கிய நஷ்ட ஈடு தொகை போதாது என தாராபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் மானாவாரி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம், பாசன நிலங்களுக்கு ரூ.1லட்சமும் 15 சதவீதம் வட்டியுடன் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
முற்றுகை போராட்டம்
விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டு தொகை இதுவரை வழங்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
எனினும் இதுவரை விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டு தொகை வழங்கப்படவில்லை பிப்ரவரி 28-ந்தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படவில்லை என்றால் மார்ச் 1-ந்தேதி தாராபுரம் ஆர்.டிஓ. அலுவலகத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொள்முதல் நிலையம்
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர் காங்கயம் ஆகிய ஒழுங்குமுறை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த கொள்முதல் நிலையங்கள் தாராபுரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே அலங்கியம் ஒழுங்குமுறைகூடத்தில் கொப்பரை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.