சிறுத்தை உயிரிழந்த வழக்கு: ப.ரவீந்திரநாத் எம்.பி. தோட்ட மேலாளர்களின் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த வழக்கில் ப.ரவீந்திரநாத் எம்.பி. தோட்ட மேலாளர்களின் ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது
பெரியகுளத்தை அடுத்த கைலாசப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தேனி அ.தி.மு.க. எம்.பி. ப.ரவீந்திரநாத் உள்பட 3 பேருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்து வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ப.ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்களான பெரியகுளத்தை சேர்ந்த தங்கவேல், ராஜவேல், அந்த தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த பூதிப்புரத்தை சேர்ந்த தொழிலாளி அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் எம்.பி.யின் தோட்ட மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகிய 2 பேருக்கும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு முறையும், மாவட்ட செசன்சு கோர்ட்டில் 2 முறையும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், தங்கவேல், ராஜவேல் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு மாவட்ட செசன்சு கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை மாவட்ட செசன்சு நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் அரசு வக்கீல் பாஸ்கரன், இந்த வழக்கில் நிலத்தின் உரிமையாளரான ப.ரவீந்திரநாத் எம்.பி. நாளை (இன்று) வனத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாக கூறி ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு (புதன்கிழமை) நீதிபதி தள்ளிவைத்தார்.