தமிழகம் மாளிகையில் புகுந்த சிறுத்தைகள்
ஊட்டியில் தமிழகம் மாளிகையில் புகுந்த சிறுத்தைகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவற்றை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி
ஊட்டியில் தமிழகம் மாளிகையில் புகுந்த சிறுத்தைகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவற்றை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மனித-வனவிலங்கு மோதல்
ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் அருகே உலா வருகின்றன. சில நேரங்களில் ஊருக்குள் வரும்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கிறது.
இதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சிறுத்தைகள் நடமாட்டம்
இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி இரவு ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகை பகுதியில் 2 சிறுத்தைகள் புகுந்து உலா வந்தது. இது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. முக்கிய அரசு அதிகாரிகள் அடிக்கடி பயன்படுத்தும் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் ஊட்டி நகர வாசிகள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
வனத்துறை கண்காணிப்பு
இந்த சிறுத்தைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் குடியிருப்பு பகுதியில் நடமாடிய சிறுத்தைகளாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், கடந்த ஜூன் மாதமும் அந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்தது.
மேலும் அந்த சிறுத்தைகள் எந்த வழியாக வந்து செல்கிறது என்பது தெரியாததால் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.