பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிதலுடன் படிக்க வேண்டும் - மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிதலுடன் படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை மூலமாக பிளஸ்-1 வகுப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயின்று, பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 91 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பாடப்பிரிவினை தேர்வு செய்து, இப்பள்ளியில் சேர்க்கை பெற்றனர்.
தொடர்ந்து கலெக்டர் அருண்தம்புராஜ் பேசுகையில், முதல்-அமைச்சரின் கனவு திட்டமாக இந்த உண்டு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது. 2021-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத விழுக்காட்டினை பெற்று மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். உயர் கல்விக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் தொடர்ந்து இப்பள்ளியில் நடைபெறுகிறது.
கடின உழைப்பு
மாணவர்கள் செல்போன் பயன்பாட்டினை தவிர்த்து பாட புத்தகங்கள் வாயிலாக படிப்பதில் முழுகவனம் செலுத்த வேண்டும். விடுதியில் தங்கி படிப்பதால் பாடம் சார்ந்த சந்தேகங்களை ஆசிரியர்கள் மற்றும் சகமாணவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் தங்களின் இலக்கினை அடைய கடினமாக உழைக்க வேண்டும். மேலும் பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிதலுடனும், மனதினை ஒருநிலைப்படுத்தி படிக்க வேண்டும் என்றார்.
இதில் கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் சங்கர், விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன், பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.