பள்ளி வகுப்புகளில் நாளை முதல் பாடங்கள் நடத்தப்படும்
5 நாட்கள் புத்துணர்வு பயிற்சியில் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். பள்ளி வகுப்புகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் பாடங்கள் நடத்தப்படும்.
புத்துணர்வு பயிற்சி
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் கடந்த 13-ந் தேதி திறக்கப்பட்டது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால் 2 ஆண்டுகளுக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்ததை நிவர்த்தி செய்யவும், அவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கவும் பள்ளிகளில் முதல் ஒரு வாரத்திற்கு புத்துணர்வு பயிற்சி அளிக்க உயர்அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த கடந்த 13-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 5 நாட்கள் வகுப்புகளில் புத்துணர்வு பயிற்சி நடத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு நல்லொழுக்க கதைகள் போதிக்கப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளின் விருப்பப்படி ஆடல், பாடல்களும் நடைபெற்றன. இந்த 5 நாட்கள் புத்துணர்வு பயிற்சியில் மாணவ-மாணவிகள் மிகவும் உற்சாகமடைந்தனர்.
நாளை முதல் பாடங்கள்...
இந்த நிலையில் பள்ளிகளில் வகுப்புகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் பாடங்கள் நடத்தப்படும். இதற்காக மாணவர்களுக்கு புத்தகங்கள் ஏற்கனவே வினியோகிக்கப்பட்டு விட்டன. கடந்த ஆண்டு பள்ளி திறப்பில் சற்று தாமதமானதால் பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு முழுமையான பாடங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். இது தொடர்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:- கடந்த கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றல் திறன் மாறியது. இதனால் அவர்களிடம் பழைய முறைப்படி பள்ளியில் இருந்து வகுப்புகளை கவனித்து பாடங்களை கற்கும் வகையில் புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
நீதிபோதனை கதைகள்
மாணவ-மாணவிகள் ஒழுக்கங்கள் கடைப்பிடித்தல், பள்ளியில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், சமுதாயத்தில் நடந்து கொள்ளவேண்டிய விதங்கள், பள்ளிக்கு வந்து செல்வது, சுய ஒழுக்கம் கடைப்பிடிப்பது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு நீதிபோதனைகள், அரசு பள்ளியில் படித்து வாழ்வில் உயர்ந்த சாதனையாளர்கள் பற்றியும் கூறினோம். இதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர். அவர்களுக்கும் பள்ளி திறந்த உடனே பாடங்களை படி, வீட்டுப்பாடம் எழுதி வா என இல்லாமல் சற்று புத்துணர்வு அளித்து மாணவ-மாணவிகளுக்கு உற்சாகம் தான். அவர்களுக்கு அரசு அறிவித்துள்ளப்படி பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து நாளைக்கு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவார்கள். வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்படுவதோடு நல்லொழுக்கங்களை கடைப்பிடிக்கவும் நீதிபோதனை வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கும் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 7,088 ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மாணவர்கள் உடல்நலன், மனநலம் சார்ந்த பணியிடைப்பயிற்சி நேற்று மாவட்டத்தில் 197 மையங்களில் நடைபெற்றது.
பயிற்சியில் ஆசிரியர்களுக்கு இணையதள வழியாக மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்வது குறித்தும், பள்ளி சார்ந்த தரவுகளை இ-ரிஜிஸ்டரில் சேமிப்பது குறித்தும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பயன்பெற என்னென்ன விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும், ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்தும், மாணவர்களுக்கு பாடங்களை முறையாக நடத்துவது, அவர்களது நலன் சார்த்த பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் அனைவரும் பயிற்சி குறித்த பின்னூட்டம் அளித்தனர்.
புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் வெவ்வேறு இடங்களில் பார்வையிட்டார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
கடந்த கொரோனா காலக்கட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. அதன்பின் தற்போதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. எமிக்ஸ் எனும் இணையதளத்தில் மாணவர் சேர்க்கை விவரம் பதிவேற்றப்படும்.
மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெற்று வருவதால் முழுமையான விவரம் கிடைக்கவில்லை. இருப்பினும் சில அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் போதுமான வகுப்பறை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இட வசதியை ஏற்படுத்த வேண்டும் என பள்ளி தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.