சமுதாய நலக்கூடம் திறக்கட்டும்... சுபகாரியங்கள் நடக்கட்டும்...
சுபகாரியங்கள் நடக்க சமுதாய நலக்கூடம் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.
மந்தாரக்குப்பம்;
கங்கைகொண்டான் பேரூராட்சி மக்கள் சுபகாரியங்கள் நடத்துவதற்காக சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற அரசு, கடந்த 2013-ம் ஆண்டு சமுதாய நலக்கூட கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
பின்னர் ரூ.50 லட்சத்தில் கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு, 2016-ம் ஆண்டில் நிறைவடைந்தது. 6 ஆண்டு ஆகியும் சமுதாய நலக்கூடம் திறக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. இதனால் திறப்பு விழா காணாமலேயே அந்த கட்டிடம் தனது உறுதி தன்மையை இழந்து வருகிறது.
இதனை திறக்காததால் சுப நிகழ்ச்சிக்காக மண்டபங்களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக பெரும் தொகையை செலவிடுகிறார்கள். சமுதாய நலக்கூடத்தை திறந்தால் நடுத்தர மற்றும் ஏழைகள் குறைந்த செலவில் சுபகாரியத்தை முடித்து விடுவார்கள். எனவே சமுதாய நலக்கூடத்தை திறந்து சுபகாரியங்கள் நடத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.