"தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம்" நெல்லை அரசு விழாவில் முதல்-அமைச்சர் பேச்சு


தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம் நெல்லை அரசு விழாவில் முதல்-அமைச்சர் பேச்சு
x

“அனைவரும் ஒருங்கிணைந்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நேற்று அரசு சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு வரவேற்று பேசினார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் பேசினார்கள்.

ரூ.348 ேகாடியில் நலத்திட்டங்கள்

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நெல்லை மாவட்டத்தில் ரூ.74.24 கோடியில் முடிவடைந்த 29 திட்டங்களை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.

மேலும், ரூ.156.28 கோடி மதிப்பில் 727 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 30 ஆயிரத்து 658 பேருக்கு ரூ.117.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். ஒட்டு மொத்தமாக ரூ.348 கோடியே 30 லட்சத்திலான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

ஆக்ஸ்போர்டு நகரம்

வீரத்தின் விளைநிலமான நெல்லையில் பேசுவதால் பெருமை அடைகிறேன். புலவர்களால் பாராட்டப்பட்ட ஊர், தமிழகத்திலேயே அதிக கல்வி நிறுவனங்கள் முதலில் உருவான ஊர் நெல்லைதான். தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு நகரமும் இதுதான்.

1973-ம் ஆண்டு நெல்லை சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி, அதற்கு திருவள்ளுவர் பெயரை சூட்டி மகிழ்ந்தவர் கருணாநிதி. இத்தகைய சிறப்புமிக்க மாவட்டத்தில் விழா நடக்கிறது. அதில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பொருநை அருங்காட்சியகம்

தாமிரபரணி கரையில் அமைந்துள்ள இந்த நெல்லை பொருநை நாகரிகம் தோன்றிய நகரம் ஆகும். எனவே, அதை போற்றும் வகையில் ரூ.15 கோடியில் நெல்லையில் 'பொருநை அருங்காட்சியகம்' அமைக்கப்பட உள்ளது. அந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளேன்.

சட்டமன்றத்தில் பேசும் எம்.எல்.ஏ.க்கள் திட்டங்களை கேட்கும்போது தங்களது தொகுதியை பின்தங்கிய தொகுதி என்று கூறுவார்கள்.

என்னை பொறுத்தவரை பின்தங்கிய தொகுதி என எதுவும் இருக்கக்கூடாது. அதனால் தான் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தை தொடங்கினேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது. தமிழகத்திற்கு வந்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தமிழகத்தின் திட்டங்களை கண்டு வியந்து பாராட்டினார்.

முதன்மை மாநிலம்

எந்த திட்டத்தையும் அறிவித்த பிறகு தாமதம் செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். தமிழகத்தில் மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுதான் தி.மு.க. அரசின் சாதனை ஆகும்.

நாம் அனைவரும் தமிழ் சமுதாயம் என்ற ஒற்றை குடும்பத்தின் உறுப்பினர்கள். அதில் நானும் ஒருவன். நீங்களும் ஒருவர். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நமது மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவோம். அனைத்து மக்களின் மனங்களிலும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் ஏற்படுத்தும் ஆட்சியாக நாம் நடத்துவோம். அதுதான் உண்மையான திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். எனவே, தொடர்ந்து இந்த அரசுக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள்.

மணிமுத்தாறில் பல்லுயிர் பூங்கா

நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மணிமுத்தாறு அணை அருகே ரூ.7 கோடி செலவில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.

நெல்லை மாநகர மக்களின் நலனுக்காக ரூ.370 கோடியில் புதிதாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். இதற்கான நிலம் எடுக்கும் பணி நடைபெற்று, 3 கட்டங்களாக திட்டம் நிறைவேற்றப்படும்.

தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம்

கருணாநிதியின் கனவு திட்டமான தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்துக்கு கடந்த 2009-ம் ஆண்டு நான் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது, முதற்கட்டமாக ரூ.369 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அதில் எந்த பணியும் இல்லாமல் கிடப்பில் போட்டனர். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டேன். அதன்படி பணி தொடங்கப்பட்டு உள்ளது.

எனவே, அடுத்த ஆண்டுக்குள் (2023) இந்த திட்டம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 20 ஆயிரத்து 340 ஏக்கர் வேளாண் நிலம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்'.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காணி பழங்குடியின மக்கள்

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் காரையாறு அணையை ஒட்டி அகஸ்தியர் காலனி, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி, சேர்வலாறு ஆகிய இடங்களில் 158 குடும்பங்களை சேர்ந்த 442 காணி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு நில பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

நெல்லையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக 78 காணி பழங்குடியின மக்களுக்கு தனி நபர் பட்டாவை வழங்கினார்.

பொதுமக்களிடம் மனு வாங்கினார்

நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகையில் இருந்து விழா நடைபெற்ற நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேனில் சென்றார். அவர் வரும் வழியில் நெடுகிலும் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழிநெடுகிலும் நின்ற பொதுமக்களை பார்த்து கை குப்பி வணங்கியும், கை அசைத்தும் சென்றார். வேனில் இருந்து இறங்கி வந்து சாலையோரம் நின்ற பொதுமக்கள் கொடுத்த மனுக்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.


Next Story