'நடப்போம், நலம் பெறுவோம்' நிகழ்ச்சி; அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்தனர்


நடப்போம், நலம் பெறுவோம் நிகழ்ச்சி; அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்தனர்
x

தூத்துக்குடியில் ‘நடப்போம், நலம் பெறுவோம்’ நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.

தூத்துக்குடி,

தமிழக அரசு 'நடப்போம், நலம் பெறுவோம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் நீள சாலை 'சுகாதார நடைபயிற்சி சாலை'யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை சுகாதார நடைபயிற்சி சாலையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சாலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் நேற்று காலையில் 5.30 மணிக்கு நடைபயிற்சியை தொடங்கி ஆய்வு செய்தனர். 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று 7 மணி அளவில் நிறைவு செய்தனர்.

விழிப்புணர்வு பேரணி

தொடர்ந்து உலக இதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் சுகாதார நடைபயிற்சி சாலைகளை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த சாலையில் மட்டும் மக்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பதற்காக அவை அமைக்கப்படவில்லை. அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள ஒரு சாலையை தேர்வு செய்து 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். நடைபயிற்சி மூலம் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் எஸ்.செல்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story