வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்
x

சேலத்தில் மேளதாளம் முழங்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்

சேலத்தில் மேளதாளம் முழங்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்று முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்திற்கு வந்தார். சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் தலைமையில் திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் செங்கோல் மற்றும் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றோர்.

வரவேற்பை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கூடியிருந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை, எளிய, நடுத்தர, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. இயக்கத்தை உருவாக்கி மக்கள் செல்வாக்கு பெற்று முதல்-அமைச்சராகி தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா 6 முறை முதல்-அமைச்சராக இருந்து ஏழைகளுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வந்தார். கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அவர் வழியில் ஏழை குழந்தைகள் சிறந்த கல்விபெற ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து கல்வியில் தமிழகத்தை முதல் மாநிலமாக்கினார்.

நானே உதாரணம்

தற்போது தி.மு.க. அரசு மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் ஆகிய திட்டங்களை நிறுத்தி விட்டது. மக்கள் நலனில் அக்கறை கொண்டது அ.தி.மு.க. ஆகும். அ.தி.மு.க. தொண்டர்கள் எம்.எல்.ஏ., எம்.பி. ஏன் முதல்-அமைச்சராக கூட ஆகமுடியும். 49 ஆண்டுகளாக கட்சியில் இருந்து வருகிறேன். கிளை கழக செயலாளராக இருந்த போது பல கூட்டங்களுக்கு சென்று தலைவர்கள் பேசும் பேச்சை கேட்டு படிப்படியாக உயர்ந்து உச்ச பட்சமாக கட்சியில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளேன். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் உயர்ந்த பதவி கிடைக்கும். அதற்கு நானே (எடப்பாடி பழனிசாமி) உதாரணம்.

சேலம் ராசியான மாவட்டம். மக்கள் ஒத்துழைப்போடு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்று ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக முதல்-அமைச்சராக சேலம் மாவட்டத்தை சேர்ந்த நான் தேர்வு பெற்றேன். 1½ கோடி தொண்டர்களால் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்று உள்ளேன்.

சிறப்பான வரவேற்பு

காலை 7.30 மணிக்கு சென்னையில் புறப்பட்டு சேலத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்து உள்ளேன். 11 மணி நேரம் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சேலம் வந்த எனக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க. சரிந்து விட்டது என்று சொன்னவர்கள் மூக்கு மேல விரல் வைக்கும் வகையில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் அளவில் மக்கள் செல்வாக்கு பெற்று இருக்கிறது.

மக்களுக்கு சேவை செய்யும் முதன்மை கட்சி அ.தி.மு.க.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இரு பெரும் தலைவர்களை மக்கள் தெய்வமாக மதித்து வருகிறார்கள். வாழும் போது மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை மக்களுக்கு சிறப்பாக செய்தார்கள். நானும் பொறுப்பு ஏற்றதும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

பொய் வழக்கு

தற்போது ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை ஒழிக்கவும், பழிவாங்கவும் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பு கானல் நீராகத்தான் காட்சி அளிக்கும். பொய் வழக்குகளை தவிடு பொடியாக்கி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வருவோம். ஜெயலலிதா சட்டசபையில் எனக்கு பிறகும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று கூறினார். காரணம் வலிமையான தொண்டர்கள், உழைப்பாளிகள், இளைஞர் பட்டாளம் அ.தி.மு.க.வில் உள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் மாவட்டம் முழுவதும் பாலம் அமைக்கப்பட்டது. மாநகர் பகுதி முழுவதும் பாலம் நிறைந்தவையாக காட்சி அளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது. பூமிக்கு அடியில் மின்பாதை அமைக்கப்பட்டது. ஏராளமான தெரு விளக்குகள் அமைத்து கொடுக்கப்பட்டது. சேலம் மாவட்டத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியில் அதிக திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி தலைவாசலில் கால்நடை பூங்கா, சட்டக்கல்லூரி ஆகியவை நாம் கட்டி கொடுத்தோம். அவர்கள் திறக்கிறார்கள். தற்போது தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு வந்து விட்டது. தி.மு.க. ஆட்சி வந்தாலே மின் வெட்டுதான். தி.மு.க. ஆட்சியில் நிர்வாக திறமை இல்லை.

கொலை, கொள்ளை

அ.தி.மு.க. ஆட்சியில் அதிக கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்தில் 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் டாக்டருக்கு படித்து வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும் விருது பெற்றது. உள்ளாட்சி துறையில் மட்டும் 140 விருதுகள் பெற்றோம்.

தி.மு.க. ஆட்சியில் எத்தனை விருதுகள் பெற்றார்கள். அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் கூறுகின்றனர். ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளிலேயே இந்த ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தற்போது சட்டம், ஒழங்கு சீர் கெட்டு போய் விட்டது. கொலை, கொள்ளை நடக்கிறது.

போதை பொருள் எங்கு பார்த்தாலும் விற்கப்படுகிறது. இளைஞர்கள், மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளாகி சீரழிந்து போகிறார்கள். இது தான் திராவிட மாடல் ஆட்சி. இவைகளை கட்டுப்படுத்த தவறியது தி.மு.க. ஆட்சி. இதற்கெல்லாம் முடிவு கட்ட வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி மீண்டும் அற்புதமான ஆட்சி அமைய உழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story