லெட்சுமாங்குடி கடைவீதி சாலையை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும்


லெட்சுமாங்குடி கடைவீதி சாலையை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும்
x

நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் லெட்சுமாங்குடி கடைவீதி சாலையை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் லெட்சுமாங்குடி கடைவீதி சாலையை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுகலான சாலை

கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில், மன்னார்குடி, திருவாரூர், கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் என நான்கு பிரதான பிரிவு சாலைகள் உள்ளன. இதில், திருவாரூர்-மன்னார்குடி வழித்தடத்தில் உள்ள லெட்சுமாங்குடி கடைவீதி சாலை சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் குறுகலான சாலையாகவே இருந்து வருகிறது.

30 ‌ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்கள் இந்த வழித்தடத்தில் குறைவாக சென்று வந்தது. அதனால், குறுகலான கடைவீதி சாலையில் எவ்வித சிரமமும் இன்றி கடந்து சென்று வந்தன. ஆனால் தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல் கடைவீதிக்கு சென்று வரக்கூடிய மக்கள் கூட்டமும் அதிகமாகவே உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில், லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்று விடுகின்றன. இதனால், பல மணி நேரம் வாகனங்கள் அணி வகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.

நோயாளிகள், வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரி சென்று வரும் மாணவர்கள், கடைவீதியில் சென்று வரும் மக்கள் உள்பட பலர் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

ஒருவழிபாதையாக மாற்ற வேண்டும்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லெட்சுமாங்குடி கடைவீதி சாலையில் ஒரு வழி பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.எனவே திருவாரூரில் இருந்து வரும் வாகனங்களை, கடைவீதி சாலையில் செல்லவிடாமல் ஏ.ஆர். ரோடு சென்று அரசு ஆஸ்பத்திரி வழியாக லெட்சுமாங்குடி பாலம் வழியாக செல்லும் வகையில் மாற்றி விட வேண்டும்.

அதேபோல மன்னார்குடியில் இருந்து வரும் வாகனங்களை கடைவீதி சாலை வழியாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக மாற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story