விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
சுப்பிரமணியபுரத்தில் கொடிக்கம்பம் அமைக்க பா.ம.க.வினர் பூமி பூஜை செய்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிஞ்சிப்பாடி,
கொடிக்கம்பத்திற்காக போராட்டம்
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே சுப்பிரமணியபுரம் மெயின்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 60 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு கொடியேற்றப்படவில்லை. மேலும் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.
இருப்பினும் வி.சி.க.வினர் கட்சி கொடியை ஏற்ற முயன்றதால் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பா.ம.க.வினரை கண்டித்து வி.சி.க.வினரும் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் கடந்த 29-ந் தேதி நள்ளிரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அங்குள்ள 60 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினர். இதுதொடர்பாக இருகட்சிகளையும் சேர்ந்த 67 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
பூமி பூஜை
இந்த நிலையில் சுப்பிரமணியபுரத்தில் பா.ம.க. சார்பில் கட்சி கொடிக்கம்பம் அமைப்பதற்காக மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நேற்று காலை பூமி பூஜை நடந்தது. பின்னர் பூமி பூஜை முடிந்ததும் பா.ம.க.வினர் அங்கிருந்து சென்றனர். இதுபற்றி அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், பா.ம.க.வினர் கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக வருகிற 8-ந் தேதி கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணலாம் என்று கூறி சமாதானப்படுத்தினர். பின்னா் துணை மேயர் தாமரைச்செல்வனும் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட வி.சி.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.