விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பேரூராட்சி அலுவலகம் அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மகாமுனி தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாநில துணை செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். லட்சுமணம்பட்டி, குப்புரெட்டிபட்டி, ஓமாந்தூர், பூவம்பாடி போன்ற ஊர்களில் வசிக்கும் பட்டியல் இன மக்களுக்கு சுடுகாடு கொட்டகை அமைத்து தர வேண்டும், புதுபட்டியில் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும், லட்சுமணம்பட்டியில் உள்ள சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும், பழைய ஜெயங்கொண்டம் ஊரின் மைய பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அதனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் பேரூர் கழக பொறுப்பாளர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.