திண்டுக்கல்லில் நூலக நண்பர்கள் திட்டம்
தமிழகத்தில் முதல் முறையாக திண்டுக்கல்லில் நூலக நண்பர்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
நூலக நண்பர்கள் திட்டம்
பொது நூலகத்துறை சார்பில் 'நூலக நண்பர்கள்' திட்ட தொடக்க விழா திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் வளாக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலை வகித்தார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்து, நூலக நண்பர்கள் குழுவை சேர்ந்த பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் புத்தக பைகளை வழங்கினார்.
எல்லோருக்கும் எல்லாம்....
அதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கமாகும். அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காகவே 'நூலக நண்பர்கள்' திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்தார். இந்த திட்டம் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதல் முறையாக தொடங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி முதியவர்கள். மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கே புத்தகங்களை கொண்டு சென்று அவர்களின் புத்தக வாசிப்பு திறனை ஊக்கப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதற்காக நூலக நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 300 நூலக நண்பர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் வீடுகளுக்கே புத்தகங்களை கொண்டு சென்று கொடுத்து அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவார்கள். நூலக சேவையில் விருப்பம் உள்ளவர்களும் நூலக நண்பர்கள் ஆகலாம். ஒரு நூலகத்துக்கு 5 பேர் நூலக நண்பர்களாக நியமிக்கப்படுவார்கள்.
இல்லம் தேடி நூலகம்
தமிழகத்தில் முதல் கட்டமாக 31 மாவட்ட மைய நூலகங்கள் 300 முழு நேர கிளை நூலகங்கள். 1,463 கிளை நூலகங்கள். 706 ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 500 நூலகங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊர்ப்புற நூலக பணியாளர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
இதையடுத்து அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக பள்ளி கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ரூ.37 ஆயிரம் கோடி நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். இல்லம் தேடிக்கல்வி திட்டம், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ- மாணவிகளை கண்டறிந்து அவர்கள் கல்வியை மீண்டும் தொடருவதற்காக செயல்படுத்தப்பட்டது. இந்த வகையில் தற்போது இல்லம் தேடி நூலகம் என்ற அடிப்படையில் 'நூலக நண்பர்கள்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
காலை சிற்றுண்டி
காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது, மாணவர்களின் நலனுக்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். இந்த வரிசையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். மாணவர்களின் புத்தக வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் மதுரையில் ரூ.100 கோடியில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
விழாவில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பொது நூலக இணை இயக்குனர் அமுதவள்ளி, பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் பொன்ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், எம்.எஸ்.பி. பள்ளி தாளாளர் முருகேசன், மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்பு
முன்னதாக திண்டுக்கல் வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்ய்யாமொழிக்கு சீலப்பாடியில், மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ., தி.மு.க. துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், அவைத்தலைவர் காமாட்சி, பொருளாளர் சத்யமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாநகராட்சி மேயர், துணை மேயர், ஒன்றியக்குழு தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.