காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்- பொது நூலகத் துறை பணியாளர்கள்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொது நூலகத் துறை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகையில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நாகராஜு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார். மாநிலத் தலைவர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படடனர். பொது நூலகத்தில் காலியாக உள்ள 3-ம் நிலை நூலகர் பணியிடங்களை, ஊர் புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்ப வேண்டும். அனைத்து வட்டார நூலகத்தினையும், முதல் நிலை நூலகர் பணியிடமாக அறிவித்து பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். நூலகர்களை தொழில் நுட்ப பணியாளர்களாக அறிவித்து அதற்குரிய ஊதியத்தை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள நூலக ஆய்வாளர்கள், இருப்பு சரிபார்ப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிர்வாக ரீதியாக பல சிரமங்கள் ஏற்படுவதால் அனைத்து மாவட்டங்களிலும் நூலக அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும். பொது நூலக துறையில் பல ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.