எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், பழனியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் சாலை ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். செயலாளர் பழனிமுத்துமாறன் முன்னிலை வகித்தார். இதில் பொருளாளர் லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள், முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின்போது, பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி பிரிமீயம் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். முகவர்களுக்கு பணிக்கொடை மற்றும் குழு காப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதேபோல் திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பும் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மதுரை கோட்ட எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட இணை செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் மாயக்கிருஷ்ணன், செயலாளர் ஆவுடைதங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வத்தலக்குண்டுவில், எல்.ஐ.சி. முகவர்கள் சங்க கிளை தலைவர் பரமசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கவுரவ தலைவர் துரைராஜ், செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எல்.ஐ.சி. முகவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.