பட்டாசு கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பட்டாசு கடைகளை தணிக்கை மேற்கொள்வது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
திருப்பத்தூர் தாலுகாவில் 36, நாட்டறம்பள்ளி தாலுகாவில் 25, வாணியம்பாடி தாலுகாவில் 17, ஆம்பூர் தாலுகாவில் 4 என மொத்தம் 82 பட்டாசு கடைகள் உள்ளது. இந்த கடைகளை தணிக்கை செய்து, பட்டாசு கடைகள் அமைப்பதற்கான வழிமுறையின்படி அமைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக உரிமம் வழங்கும் இடத்தில் இருப்பில் உள்ள பட்டாசுகளை அகற்ற வேண்டும்.
ரத்து செய்ய வேண்டும்
மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை ஆய்வு செய்து உடனடியாக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து தாசில்தார்களும், பொது மக்கள் பயனடையும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார், குடும்ப அட்டை, பட்டா, வங்கி கணக்கு, வீட்டுமனை ஆகிய அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதுடன், அவர்களின் குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், முத்தையன், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, தனித்துணை கலெக்டர் கோவிந்தன், தாசில்தார்கள் சிவப்பிரகாசம், சம்பத், குமார், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.