நகை, அடகு கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படும்


நகை, அடகு கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படும்
x

ஒரு மாத காலத்திற்குள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்றால் நகை மற்றும் அடகு கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராேஜஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

வேலூர்

ஒரு மாத காலத்திற்குள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்றால் நகை மற்றும் அடகு கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராேஜஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

ஆலோசனை கூட்டம்

நகைக்கடைகளில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில் வேலூர் நகை மற்றும் அடகு கடைகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் காந்தி ரோடு அருகே வாசவி திருமண மண்டபத்தில் நடந்தது.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் நகை மற்றும் அடகு வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ருக்ஜி ராஜேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேசியதாவது:-

கண்காணிப்பு கேமரா

கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் நாளுக்கு நாள் தொழில்நுட்ப ரீதியாக, சமூக வலைத்தளங்களை பார்த்து தங்களை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதனால் நாமும் நமது கடைகளுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை தரம் உயர்த்த வேண்டும். விலை மலிவாக கிடைக்கிறது என்று தரம் குறைந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தாமல், அதிக பிக்சல் கொண்ட உயர்ரக கேமராக்களை அமைக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் கருவிகளை கடைக்குள் யாருக்கும் தெரியாத இடத்தில் அமைக்க வேண்டும். கடைகளுக்குள் நுழையும் கொள்ளையர்கள் முதலில் சேதப்படுத்துவது கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காட்சிகள் பதிவாகும் கருவிகள் தான்.

இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகும் வகையில் மேம்படுத்த வேண்டும்.

கடைக்காரர்கள் ஒரே ஒரு காவலாளியை மட்டும் பணியில் அமர்த்தாமல், ஒன்றுக்கு மேற்பட்ட கடைக்காரர்கள் சேர்ந்து, ஒன்றுக்கு மேற்பட்ட காவலாளிகளை பணியில் அமர்த்தினால் பகல் இரவு பணிகளை தீவிரமாக அவர்களால் செய்ய முடியும்.

பெரும்பாலான கொள்ளை சம்பவங்கள் இரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 4 மணிக்கு உள்ளாக தான் நடக்கின்றன. எனவே அதிகப்படியான காவலர்களை பணியில் அமர்த்துவது பயன் கொடுக்கும்.

லாக்கர்கள் மற்றும் நகைபாதுகாப்பு பெட்டிகள் மீது கை வைத்தால் அலாரம் அடிக்கும் வகையிலும் மொபைல் போன்களுக்கு தகவல் வரும் மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

உரிமம் ரத்து

ஒரு மாத காலத்திற்குள் நகை மற்றும் அடகு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, கண்காணிப்பு கேமராக்களை தரம் உயர்த்தி நடவடிக்கை எடுக்காத கடைகளை, நேரில் பார்வையிடுவோம்.

அவ்வாறு நடவடிக்கையை எடுக்காத கடைகளில் பொதுமக்கள் அடகு வைக்கும் நகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை, கடை உரிமையாளர்களின் பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திருட்டு நடக்கும் வாய்ப்புகள் உள்ளன எனக் கூறி கடை உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் சங்க தலைவர், நாங்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


Next Story