வாகன நிறுத்தம் வசதி இல்லாத திருமண மண்டபங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்


வாகன நிறுத்தம் வசதி இல்லாத திருமண மண்டபங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாகன நிறுத்தம் வசதி இல்லாத திருமண மண்டபங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தலைவர் மெர்லியன்ட் தாஸ் வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

வாகன நிறுத்தம் வசதி இல்லாத திருமண மண்டபங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தலைவர் மெர்லியன்ட் தாஸ் வலியுறுத்தினார்.

மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகள், குறைகள் குறித்து விளக்கி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

கனிமவளம் கடத்தல்

குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இதனால் மலைகள், ஆறுகள், குளங்கள் அழிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் ஆறுகள், குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக கால்வாய்களை தூர்வார வேண்டும்.

ரேஷன் கடைகளில் தரமான ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் வழங்கப்படவில்லை. வசதி படைத்தவர்களுக்கு பி.எச். ரேஷன் கார்டுகளாகவே இருந்து வருகிறது. பி.எச். கார்டுகளாக மாற்றுவதற்கு ஒரு வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணம் வாங்கப்படுகிறது. திக்கணங்கோடு பகுதியில் மதுக்கடை ரோட்டோரத்தில் உள்ளதால் பெண்கள் அந்த பகுதியில் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே அந்த மதுக்கடைகளை மூட வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். மதுக்கடைகள் அருகே 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் துணையோடு இந்த விற்பனை நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் கூறினர்.

வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும் ஏராளமான லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. ஒரு லாரியில் 40 முதல் 50 டன் எடையில் கனிம வளங்கள் கொண்டு செல்வதால் சாலைகள் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், அரசும் தவறி விட்டது. கனிம வளம் கடத்தல் குறித்து மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கனிம வளம் கடத்தலை தடுக்க தவறிய அமைச்சர் மனோதங்கராஜ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

குமரி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளுக்கும் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதுடன் கல்வெட்டில் கவுன்சிலர்கள் பெயர் இடம்பெற வேண்டும். குமரி மாவட்டத்திலுள்ள திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திருமண மண்டபங்களில் வாகன நிறுத்தம் இல்லாததே இதற்கு காரணமாகும். எனவே திருமண மண்டபங்களில் வாகன நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத திருமண மண்டபங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அந்த மண்டபத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பட்டப்படிப்பு மட்டுமே உள்ளது. மாவட்ட நலன் மற்றும் மருத்துவர்கள் நலன் கருதி உடனடியாக பட்ட மேற்படிப்புக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்" என்றார்.


Next Story