வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கருவூலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கருவூலத்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜீவன் பிரமான்
மதுரை மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும். கொரோனா காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுக்கான நேர்காணல் நடைபெற வில்லை. தற்போது மீண்டும் நேர்காணல் செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியர்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்.
அரசு இ- சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்யலாம். ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி பதிவு செய்யலாம். கருவூல முகாம் இலவச சேவையை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
வங்கி கணக்கு
குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை www.tngov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஓய்வூதியம் வங்கி கணக்கு உள்ள வங்கி கிளை மேலாளர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது தாசில்தார்- துணை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். இந்த மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண், பென்சன் வழங்குவதற்காக உத்தரவு புத்தகம், வங்கி கணக்கு எண் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் விவரம்.
இணையதள முகவரி
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் www.tngov.in/karuvoolam என்ற இணையதள முகவரியில் இருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர், மாஜிஸ்ரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். மேலும், ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பதின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஓய்வூதியர்கள் ஏதும் குறைபாடு இருப்பின் தொடர்புடைய மாவட்ட கருவூல அலுவலர், மண்டல இணை இயக்குனர் அல்லது சென்னை கருவூல கணக்கு ஆணையரகத்திற்கு 044-24321761, 044-24321764 மற்றும் 044-24321765 ஆகிய எண்களில் தொலைபேசி மூலமாகவும், dta.tn@nic.in-என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.