ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை
முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
மதுரை,
மதுரை அருகேயுள்ள சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. அ.தி.மு.க. கிளைச்செயலரான இவர், கார்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். கார்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து சிலர் அனுபவித்து வந்ததாகவும், அதை அவர்களிடம் இருந்து கருப்பசாமி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் கருப்பசாமியை பழிவாங்க திட்டமிட்டனர். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டில் அவர் கார்சேரி கோவில் பகுதியில் இருந்தபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கைது
இதுதொடர்பாக கார்சேரி முன்னாள் ஊராட்சி தலைவர் ஆதரவாளர் தமிழ்ச்செல்வன், உள்பட பலர் மீது சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தமிழ்ச்செல்வன், சவுந்தரபாண்டி, பிரபுதேவா, இளவரசன், கவியரசன், அஜித், வெண்ணிலா, முனியசாமி உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.
ஆயுள் தண்டனை
விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான தமிழ்ச்செல்வன், சவுந்தரபாண்டி, பிரபுதேவா, இளவரசன், கவியரசன், அஜித், வெண்ணிலா, முனியசாமி ஆகிய 8 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார். அருள்மணிகண்டன், பாலமுருகன், ராஜாங்கம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.