வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
மதுரை,
மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (வயது 29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகியுள்ளார். பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு அவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து உள்ளார். சுமார் 2 மாதம் திருப்பூரில் ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து இருந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து அன்புவை கைது செய்தனர். அவரது கட்டுப்பாட்டில் இருந்த சிறுமியை மீட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜரானார்.
முடிவில், அன்பு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.