முதியவருக்கு வாழ்நாள் சிறை
9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துளசிராம் (வயது 72). இவர் கடந்த 2021-ம் ஆண்டில் 9 வயது சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து தன்னுடைய உறவினரிடம் அந்த சிறுமி தெரிவித்தாள். இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து துளசிராமை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், துளசிராம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமரவேல் நேற்று தீர்ப்பளித்தார். அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் அரசுக்கு உத்தரவிட்டார்.